ஜிம்பாப்வேயில் மூன்றாவது அதிபராக துணை அதிபர் பதவி வகித்த எம்மர்சன் நங்காவா நாளை பதவியேற்கிறார்.
ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 37 ஆண்டுகளாக அதிபராக நீடித்து வந்த முகாபேவின் ஆட்சி அகற்றப்பட்டது. இதைதொடர்ந்து, அந்நாட்டின் மூன்றாவது அதிபராக துணை அதிபர் பதவியில் இருந்த எம்மர்சன் நாளை பதவியேற்கிறார். இதனால் அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ராணுவம், ஆளுங்கட்சி மற்றும் பொதுமக்களின் நெருக்கடிக்கு பணிந்து தனது அதிபர் பதவியை முகாபே ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
அவரது ராஜினாமாவை தொடர்ந்து, ஆளும் ஜானு பிஎஃப் கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அடுத்த அதிபராகவும் எம்மர்சனை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை எம்மர்சன் அதிபர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே சட்டத்தின்படி ஆட்சியில் இருந்து அதிபர் நீக்கப்பட்டால், அவருக்கு பதிலாக வேறொருவரை 48 மணி நேரத்துக்குள் நியமிக்க முடியும்.