அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சேனலை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது யூடியூப் நிர்வாகம்.
டிரம்பின் யூடியூப் சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தது என்று யூடியூப் தெரிவித்தது. அந்த வீடியோ இப்போது அகற்றப்பட்டது என்று சொன்னதுடன், அந்த வீடியோவின் விவரங்களைப் பகிரவும் யூடியூப் மறுத்துவிட்டது.
தரக்கொள்கையை மீறியதற்காக வெள்ளை மாளிகையின் சேனலில் இருந்து உள்ளடக்கத்தையும் யூடியூப் நீக்கியது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இப்போது வரை, ட்ரம்பின் கணக்குகளை முடக்காத ஒரே பெரிய சமூக ஊடக தளமாக யூடியூப் இருந்தது. ட்ரம்பின் கணக்கை "காலவரையின்றி" பேஸ்புக் நிறுத்தியுள்ளது, டிரம்பிற்கு ட்விட்டர் முற்றிலும் தடை விதித்துள்ளது.
"கவனமாக மதிப்பாய்வு செய்தபின், வன்முறைக்கான தற்போதைய சாத்தியங்கள் அடிப்படையில், டொனால்ட் ஜே. டிரம்ப் சேனலில் பதிவேற்றப்பட்ட புதிய உள்ளடக்கத்தை அகற்றி, வன்முறையைத் தூண்டும் விதமாக எங்கள் கொள்கைகளை மீறியதற்காக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தோம்" என்று யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் விளைவாக ட்ரம்ப் இனி, யூடியூப் சேனலில் புதிய வீடியோக்களை அல்லது லைவ் ஸ்ட்ரீம்களை குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு பதிவேற்றமுடியாது. இது நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.