மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை முந்தி உலகின் பணக்கார மனிதர் என்ற அந்தஸ்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் பெற்றார்.
நியூயார்க் பங்குசந்தையில் அமேசான் நிறுவன பங்குகள் கணிசமாக உயர்ந்ததை அடுத்து, ஜெஃப் பேசோஸின் சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை முதல்முறையாகக் கடந்ததாக போர்ஃப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. நியூயார்க் பங்குசந்தையில் அமேசான் நிறுவன பங்குகள் 1.6 சதவீதம் உயர்ந்தன. இதன்மூலம் ஜெஃப் பேசோஸின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடியது. பங்குசந்தைகள் உயர்வால் அவரது மொத்த சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட 500 மில்லியன் டாலர்கள் அதிகமாகும். கடந்த மார்ச்சில் வெளியான போர்ஃப்ஸ் இதழின் உலகின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் அமெரிக்காவின் பில்கேட்ஸ் மற்றும் ஸ்பெயினின் அமான்சியோ ஓர்டிகோ ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருந்தார். இதில், அமான்சியோவின் சொத்து மதிப்பை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜெஃப் பேசோஸ் உருவெடுத்தார். இந்த பட்டியலில் அவர் தற்போது முதலிடம் பெற்றுள்ளார்.