உலகிலேயே மிகவும் குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கும் முதல் குழந்தை எனும் கின்னஸ் உலகச் சாதனையை படைத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தை.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் செல்லி பட்லர் என்கிற பெண் கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்திருந்தார். அவருக்கான பிரசவ நாளாக நவம்பர் 11, 2020 ஆம் தேதியை மருத்துவர்கள் குறித்திருந்தனர். இந்நிலையில் ஜூலை 4, 2020 அன்று அப்பெண்ணுக்கு வயிற்றில் வலி ஏற்படவே, மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் வளரும் சிசுவை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பொதுவாக பிரசவக் காலம் 40 வாரங்கள் ஆகும். ஆனால் இக்குழந்தை 21 வாரங்களிலேயே பிறந்துவிட்டது. அதாவது பிரசவிக்கும் நாளிலிருந்து 132 நாட்களுக்கு முன்னதாகவே குழந்தை பிறந்துள்ளது. குழந்தை உயிருடன் பிறந்தாலும், நிச்சயம் அதிக நாட்கள் வாழாது என டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை உயிர் பிழைக்க 1 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறினர். குழந்தை பிறந்தபோது அதன் எடை வெறும் 420 கிராம்தான். அக்குழந்தையை அதன் பெற்றோரால் அவர்களது உள்ளங்கையில் தூக்க முடிந்தது. அந்த அளவிற்கு குழந்தை சிறியதாக இருந்தது.
இதையடுத்து குழந்தை மருத்துக் குழுவினரின் நேரடி பராமரிப்பில் வளர்ந்து வந்தது. கர்டிஸ் எனும் பெயரிடப்பட்ட அக்குழந்தையின் உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வந்ததைத் தொடர்ந்து பெற்றோருக்கும் மருத்துவர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. 9 மாதங்கள் தொடர் கண்காணிப்புக்குப் பின், குழந்தையின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என முடிவு செய்த மருத்துவர்கள், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்தனர்.
ஜூலை 5, 2021 அன்று குழந்தை அதன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது. உலகிலேயே மிகவும் குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கும் முதல் குழந்தை எனும் கின்னஸ் உலகச் சாதனையை இது படைத்துள்ளது.