கொரோனாவுக்குப் பிறகும் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என பில் கேட்ஸ் தனது ஊழியர்களுக்கு அனுமதியளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற அனுமதி அளித்துள்ளன. இச்சூழலில், உலகில் இரண்டாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் தனது நிறுவன ஊழியர்களை கொரோனா அலை ஓயும் வரை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதியளித்துள்ளார்.
இதுகுறித்து ஆன்லைன் வணிக உச்சி மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், ‘'ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் ஏற்பாடு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை கடந்த சில மாதங்களில் நாம் நிரூபித்துள்ளோம். கொரோனாவுக்குப் பிறகும் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு, அவர்களின் வேலையும் சூழ்நிலையும் அனுமதி அளித்தால் அதை நாம் செய்து கொடுப்போம்.
மென்பொருள் பொறியியல் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும், சிறிய வீடுகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை சற்று கடினமான விஷயம்தான். குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு சிரமங்கள் அதிகம்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு நாம் இன்னும் நமது சாப்ட்வேர்களை மேம்படுத்த வேண்டியுள்ளது’’ என்று பில்கேட்ஸ் கூறினார்.