வாடகைக்கு குடியிருப்போர் அந்த வீட்டில் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வசிப்பீர்களா? ஆனால் 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இரண்டு உலகப் போர்கள் நடந்த தருணத்தின் போதும் ஒரே வீட்டில் தன்னுடைய வாழ்க்கையை கடத்தியிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
இன்றைய உலகின் கொள்ளுப்பாட்டியாக இருக்கும் எல்சி ஆல்காக் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
1918ம் ஆண்டு பிறந்த எல்சி, இங்கிலாந்தில் இரண்டு உலகப் போர்கள், நான்கு மன்னர்கள், ராணிகள் மற்றும் 25 பிரதமர்கள் மந்திரிகள் மாறிய போதும் தற்போது வரை லண்டனில் உள்ள அதே வீட்டில்தான் வசித்து வருகிறார்.
இங்கிலாந்தின் Nottinghamshire-ன் ஹூத்வைட் என்ற கிராமத்தில் உள்ள பார்கெர் தெருவில் உள்ளது எல்சி ஆல்காக்கின் வீடு. 1902ம் ஆண்டு 30 பவுண்ட் அதாவது 2800 ரூபாய்க்கு அந்த வீட்டில் எல்சியின் தந்தை வாடகைக்கு குடியேறினார்.
எல்சி அவரது பெற்றோரின் 5 குழந்தைகளில் இளையவராவார். தனது 14 வயது இருக்கும் போதே எல்சியின் தாயார் நிமோனியா காரணமாக இறந்துவிடவே, தந்தையை தானே பராமரித்து வந்திருக்கிறார்.
1941ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பில் என்பவரை மணமுடித்த பிறகும் எல்சி தனது தந்தையை கண்காணித்துக் கொள்வதற்காக அதே வீட்டிலேயேதான் வசித்திருந்தார்.
இது தொடர்பாக The Sun இதழுக்கு பேட்டியளித்துள்ள எல்சி ஆல்காக், “என்னுடைய அம்மா எலிசா இறந்த பிறகு நான் இங்கேயே அப்பாவுடன் தங்கிவிட்டேன். பில் உடன் கல்யாணம் ஆன பிறகும் நாங்கள் எங்கேயும் மாறவில்லை. 1949ல் அப்பா மறைந்த பிறகு இந்த வீட்டை நாங்களே 1960களின் போது வாங்கிவிட்டோம்” எனக் கூறியிருக்கிறார்.
கடன் பெற்று 250 பவுண்ட்ஸ் (23845.63 ரூபாய்) கொடுத்து 60’ஸில் எல்சி வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 75,000 பவுண்ட்ஸ். இந்திய ரூபாய் மதிப்புப்படி, 7,15,36,882 ஆகும்.
“இந்த வீட்டை விட்டு வெறு எங்கேயும் சென்று வாழ வேண்டும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. இதுதான் என்னுடைய வீடு. இந்த வீடு எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. இந்த வீட்டை விடுத்து வேறு எங்குமே எனக்கு மகிழ்ச்சியை தராது.” என104 வயது எல்சி ஆல்காக் உணர்ச்சிப் பொங்க கூறியிருக்கிறார்.