தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு 11 லட்சம் செலவழித்து பார்ப்போரை வியப்படைய வைத்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே குதூகலம்தான். சமீபகாலமாக தங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடி சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை வாங்குவதை ஹாபியாகவே வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கும் ஒரு ஸ்டெப் மேலேபோய் அசந்துபோகும் அளவிற்கு தனது செல்ல நாயின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்.
சீனாவின் சாங்க்ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் ஆற்றுப்பகுதியில் ஒரு பெண் தனது செல்ல நாயின் 10-வது பிறந்தநாளை 11 லட்சம் செலவுசெய்து கொண்டாடி இருக்கிறார். 520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை ‘’ஹேப்பி 10வது பர்த்டே டௌ-டௌ’’ என்ற எழுத்துகள் மற்றும் மற்றும் நாயின் உருவப்படம் ஆகிய வடிவங்களில் ஆகாயத்தில் பறக்கவிட்டு கொண்டாடி இருக்கிறார். ஆனால் ஆற்றங்கரையில் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் இவர் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்காமல் தடுத்துவிட்டனர் போலீசார்.
சீனாவில் ஆற்றங்கரைகளில் குறிப்பாக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் உடனடியாக விழா இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்திவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஒருவேளை ஆகாயத்தில் பறக்கும்போது ட்ரோன்களை பார்த்திருந்தால் கண்டிப்பாக சுட்டு வீழ்த்தியிருப்போம் என்று தெரிவித்திருக்கின்றனர். மாண்டரின் மொழியில் 520 என்ற எண்ணுக்கு ஐ லவ் யூ என்ற அர்த்தமும் இருப்பதால் அந்த பெண் 520 ட்ரோன்களை பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்.