உலகம்

அமெரிக்காவில் தனது கருவை தானே கருக்கலைப்பு செய்த பெண் கொலை வழக்கில் கைது! ஏன்?

அமெரிக்காவில் தனது கருவை தானே கருக்கலைப்பு செய்த பெண் கொலை வழக்கில் கைது! ஏன்?

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்த புதிய கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை அடுத்து, தனது கருவை தானே கருக்கலைப்பு செய்த பெண் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ரியோ கிராண்டே சிட்டியில் 26 வயது நிரம்பிய பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தானாகவே கருச்சிதைவு நடந்தது. இந்த கருக்கலைப்பைத் தாமே தூண்டியதாக மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் ஒப்புக்கொண்டார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவர் மீது கொலை வழக்குப் பதிந்து ஸ்டார் கவுண்டி சிறையில் அந்த பெண்ணை அடைத்தனர் காவல்துறையினர்.

என்ன காரணம்?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஒரு புதிய மாநில சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுமார் ஆறு வாரங்களில் கருக்கலைப்பு செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது. அவ்வாறு கருக்கலைப்பு செய்வதை “கொலை” செய்வதாக இச்சட்டம் கூறுகிறது. கரு இருதய செயல்பாடு கண்டறியப்பட்ட பிறகு, கருக்கலைப்பு செய்ய ஒரு பெண்ணுக்கு உதவி செய்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. உதவி செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் $10,000 அபராதம் விதிக்கப்பட சட்டம் வழிவகை செய்கிறது. தாங்கள் கர்ப்பமாக இருப்பதை உணராமல் இருந்த பெண்கள், பாலியல் வன்கொடுமை விளைவாக ஏற்படும் கர்ப்பங்களுக்கு மட்டும் இச்சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றப்பட்ட பிறகு முதல்முறையாக பெண் ஒருவர் கருக்கலைப்பு செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிசம்பரில் இச்சட்டத்திற்கு தடையை விதித்தது, ஆனால் கூடுதல் சட்ட சவால்கள் நிலுவையில் இருப்பதால் தற்போது கைது சம்பவம் அரங்கேறியுள்ளது.

கைதை எதிர்த்து போராட்டம்:

ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் கருக்கலைப்பு உதவிக் குழுவான La Frontera Fund ஏற்பாடு செய்த போராட்டத்தில் சுமார் 20 பேர் ஸ்டார் கவுண்டி சிறைக்கு வெளியே கூடினர். கைதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி, சட்டத்தை திரும்பப் பெற அவர்கள் வலியுறுத்தினர்