கனடாவில் பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில், விரைவில் பாஸ்போர்டில் பாலினம் குறிப்பிடுவதை அந்நாட்டு அரசு நிறுத்தவுள்ளது.
பாலினம் குறிப்பிடப்படாத பாஸ்போர்ட்களை வழங்க கனடா திட்டமிட்டிருக்கிறது. இதன்படி, பாஸ்போர்ட் வைத்திருப்பவர் ஆணா, பெண்ணா என்பது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்காது. அதற்குப் பதிலாக எக்ஸ் என்ற குறியீடு மட்டும் அச்சிடப்பட்டிருக்கும். பாலினச் சமநிலையைப் பேணுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் அகமது ஹுசைன் தெரிவித்தார்.
பாஸ்போர்ட் மட்டுமல்லாமல், மற்ற அரசு அடையாள அட்டைகளிலும் பாலினம் குறிப்பிடப்படாது என்று கனடா அரசு கூறியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் கனடாவின் மனித உரிமைகள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதில், இனம், மதம், பாலினம், வயது ஆகியவற்றால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அது மனித உரிமை மீறல் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.