உலகம்

பல்வேறு நாடுகளில் பரவி வரும் காட்டுத் தீ - அச்சத்தில் மக்கள்

பல்வேறு நாடுகளில் பரவி வரும் காட்டுத் தீ - அச்சத்தில் மக்கள்

PT WEB

உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வரும் காட்டுத் தீ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் அருகே காட்டுத் தீ பற்றி எரிகிறது. கடந்த திங்கள் கிழமையன்று விலியா என்ற இடத்தில் எரியத் தொடங்கிய தீ, கட்டுக்கடங்காமல் பரவி தலைநகர் ஏதென்ஸ் நகரின் தென்மேற்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சூரியனை மறைக்கும் அளவுக்கு காட்டுத் தீயானது வான்நோக்கி சென்று புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

130 தீயணைப்பு வாகனங்கள், 8 ஹெலிகாப்டர் மற்றும் 3 விமானங்கள் உதவியுடன் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். வெவ்வேறு நாடுகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம் காட்டு வருகின்றனர். இதுவரை 7,500 ஏக்கரில் இருந்த மரங்கள் தீக்கு இரையாகின.

ரஷ்யாவின் யகுதியா என்ற இடத்தில் காட்டுத் தீ பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. ஒரே நாளில் 22 இடங்களில் 4,500 ஹெக்டர் பரப்பளவில் தீ பரவியது. மேலும், பல்வேறு குடியிருப்பு பகுதிகளையும் தீ விட்டுவைக்கவில்லை. வீடுகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை தீக்கிரையாகின.

இதே போன்று, அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக கலிபோர்னியா மாகாணத்தின் வனப்பகுதியில் தீ பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைக்கும் வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, பிரான்ஸ் நாட்டில் விடாபன் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.