Leap day 2024 file image
உலகம்

2024 பிப்ரவரியில் ஏன் 29 நாட்கள்? லீப் வருடம் ஏன் கொண்டாடப்படுகிறது ? எப்படி கணக்கிடப்படும்?

லீப் டே என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும். இந்த வருடத்தில் பிறக்கும் குழந்தைகளை லீப் இயர் பேபி என்றும் சொல்வதுண்டு.

Jayashree A

லீப் டே என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும். ஏன் அப்படி? பார்ப்போம்...

லீப் வருடம் - 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏன்?

பூமியானது சூரியனை சுற்றி வர 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 49 - 56 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதை 12 மாதங்களாக சரியாக பிரிக்கும் பொழுது, பின்னுள்ள 5 மணி நேரம் 48 நிமிடங்கள் அதன்பின் வரும் நொடிகளை நாள்கணக்கில் சேர்க்க முடியவில்லை. இதனால் அதை சேமித்துவைத்து 4 வருடங்களுக்கு ஒருமுறை அது முழுமையான ஒரு நாளாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி 28 நாட்கள் மட்டும் உள்ள பிப்ரவரியில், லீப் வருடம் வரும்போது 29 நாட்கள் இருக்கும். 2024 வருடம் லீப் வருடம் என்பதால், பிப்ரவரியில் 29 நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதுதான் இன்று!

சேர்க்காவிட்டால் என்ன ஆகும்?

அந்த ஒருநாள் கணக்கு மட்டும் முந்தைய நாளுக்கு சென்றுகொண்டே இருக்கும். இது ஒருவருடம், இரு வருடம் என்றால் பரவாயில்லை... ஒவ்வொரு வருடமும் என்றால்...? 30 முறை இப்படி தள்ளிப்போனால், நாம் ஒரு மாதமே முன்னோக்கி செல்ல வேண்டிவரும். உதாரணத்துக்கு பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டுமே என்ற நடைமுறையில் இருந்தால் ஏப்ரல் மாதம் வரவேண்டிய கோடைக்காலம், மார்ச் மாதமே வந்துவிடும். இது இப்படியே முன்னோக்கி சென்று பருவநிலை மாற்றங்கள் தொடர்பான குழப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும்! அதனால் பிப்ரவரி 29-ம் தேதி கண்டிப்பான தேவை.

அந்த ஒருநாள், ஏன் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது?

ஜூலியஸ் சீசர்

பொதுவாக 12 மாதங்களை பிரிக்கும் பொழுது கடைசி மாதத்தில்தானே 28 நாட்கள் வரவேண்டும்? இது என்ன நடுவில் இருக்கும் பிப்ரவரி மாதத்தில் வருகிறதே என்ற சந்தேகம் அனைவருக்கும் வரலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது, ரோமானிய சர்வாதிகாரியான ஜூலியஸ் சீசர் ஆட்சி காலத்தில் (கிமு.45ல் ) ஜூலியன் நாட்காட்டிக்காட்டியில் பிப்ரவரி மாதம் கடைசி மாதமாக இருந்தது.

Leap year 2024

அதாவது ஜூலியன் நாட்காட்டிக்காட்டியில் மார்ச்சில் தொடங்கி பிப்ரவரியில் வருடமானது முடியும். ஒவ்வொரு மாதத்திற்கும் 31 நாட்கள் என்று கணக்கீடு செய்து கடைசி மாதமாக அப்போது இருந்த பிப்ரவரியில் 24-ஆவது நாளாக கணக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு வந்த மாற்றங்கள், கணக்கீடுகளின் காரணமாக அது 29 நாட்களாக மாற்றப்பட்டது.

லீப் இயர் பேபி

பிப்ரவரி 29ல் பிறக்கும் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டமானது 4 வருடத்திற்கு ஒரு முறை வருவதால், அவர்கள் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 தனது பிறந்ததினமாக கொண்டாடுகின்றனர். இவர்களை லீப் இயர் பேபி என்றும் சொல்வதுண்டு.

கூகுள் வெளியிட்ட டூடுள்

இத்தனை பெருமைக்கொண்ட லீப் இயரை கொண்டாடவும் செய்யவேண்டுமல்லவா...? அதை செய்ய அவை அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் மெக்சிகோ முன்வந்தன. இந்த நாளில் அங்கு ஆடம்பரமான கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. கூகுளும் லீப் மாதத்தை கொண்டாடும் பொருட்டு இன்று டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது!