உலகம்

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக முதல் ஆப்பிரிக்கர் தேர்வு

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக முதல் ஆப்பிரிக்கர் தேர்வு

Rasus

முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு  எத்தியோப்பியாவை சேர்ந்த 52 வயதாகும் டெட்ராஸ் அதோனோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐநாவின் மிக முக்கியமான அங்கமாக செயல்படும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள மார்க்கரெட் சானின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில், தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 185 நாட்டு உறுப்பினர்களில் 133 உறுப்பினர்கள் டெட்ராஸ் அதோனோமுக்கு வாக்களித்து, அவரை தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

ஜூலை 1 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள டெட்ராஸ் அதோனோம் தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார். இவர் எத்தியோப்பியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். மேலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் டெட்ராஸ் அதோனோ என்பது குறிப்பிடத்தக்கது.

டெட்ராஸ் எத்தியோபியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மக்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நிறுவியுள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 65 மில்லியன் மக்கள் அகதிகளாக முகாம்களில் உள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டும் 18 மில்லியன் மக்கள் போர் மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அகதிகளாக முகாம்களில் உள்ளனர். எத்தியோபியாவில் மட்டும் 743000 அகதிகள் உள்ளனர். இதுபோன்ற சூழலில் எத்தியோபியாவை சேர்ந்த ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு உள்ள உண்மையான சூழலை புரிந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.

டெட்ராஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் பேசியதாவது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட நமது சகோதர, சகோதரிகளுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், அவர்களுக்கு சேவை செய்வது, என்று அவர் கூறினார்.