இஸ்ரேல், பாலஸ்தீனம் twitter
உலகம்

பாலஸ்தீனத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தாக்குதல்.. அத்துமீறுகிறதா இஸ்ரேல்? தற்போதைய நிலைமை என்ன?

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனப் போராளிகள் 12 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 100க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன?

உலகின் பலமிக்க நாடுகளுள் ஒன்றான இஸ்ரேல், இன்று பாலஸ்தீனர்களுக்கு அழிவை ஏற்படுத்தி வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இவர்களுக்குள் நடக்கும் மோதல் இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாக நிலவிவருகிறது. அதாவது பாலஸ்தீனத்தில் காசாமுனை, மேற்குக் கரை என இரண்டு பகுதிகள் உள்ளன.

இந்த காசாமுனை பகுதியானது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஹமாஸ் அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. அதேபோல் மேற்குக் கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். இந்த மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பல்வேறு போராளிக் குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

இஸ்ரேலியா்கள் மீது பாலஸ்தீனா்கள் தாக்குதல்

இதனாலேயே அந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்குமிடையே மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக இருந்துவருகிறது. தங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியா்கள் மீது பாலஸ்தீனா்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையின் ஜெனின் நகரில் போராளி குழுக்கள் சிலர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

ஜூலை 3ஆம் தேதி நள்ளிரவு நடந்த தாக்குதல்

இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு மேற்குக் கரை பகுதியைச் சோ்ந்த ஜெனின் நகருக்குள் புகுந்த சுமாா் 2,000 இஸ்ரேல் படையினா், அங்குள்ள அகதிகள் முகாமை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இந்த நடவடிக்கையில் 1,000 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 30 ஆயுதக் குழுவினா் கைது செய்யப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலின் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை

20 ஆண்டுகளுக்கு முன்னா் இரண்டாவது பாலஸ்தீன கிளா்ச்சியை அடக்குவதற்காக மேற்குக் கரைப் பகுதிக்குள் ஏராளமான இஸ்ரேல் படையினா் புகுந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனா். அதற்கு அடுத்தபடியாக, அந்தப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்குப் பதிலடியாக பாலஸ்தீனியர் செய்த செயல்!

இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற கடுமையான தாக்குதல் இதுதான் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடைபெற்ற அந்தத் தெருக்களில் கரும்புகை எழுந்ததாகவும், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டின் டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வணிக மையத்துக்கு வெளியே, பாலஸ்தீனர் ஒருவர் தனது காரை மக்களின் மீது ஏற்றியதில் 7 பேர் காயம் அடைந்ததாகவும், இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது.

இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி, ”ஆயுதக் குழுவினருக்கு எதிராக ஜெனின் அகதிகள் முகாமில் ராணுவத்தினா் தொடங்கிய நடவடிக்கை முழுமையடைந்து விட்டதால் அவா்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனர்” என்றார்.

இந்த தாக்குதலில் கட்டடங்கள், வீடுகள் அனைத்தும் சேதமாகியுள்ளன. இந்த 2 நாள் தேடுதல் வேட்டையில் உயிரிழந்தவா்களின் இறுதி ஊா்வலத்தில் துப்பாக்கிகளையும், பல்வேறு பாலஸ்தீன அமைப்புகளின் கொடிகளையும் ஏந்தியவாறு ஏராளமான ஆயுதக் குழுவினா் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

மீண்டும் நகருக்குள் வரத் தொடங்கிய மக்கள்!

தற்போது, இஸ்ரேல் படையினா் வெளியேறியதைத் தொடா்ந்து, அவா்களது தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களை பாலஸ்தீனியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மோதல் காரணமாக ஜெனின் நகரிலிருந்து வெளியேறிவா்கள் தற்போது அந்த நகருக்கு மீண்டும் வரத் தொடங்கினா்.

கவலை தெரிவித்த ஐ.நா.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசாங்கமும், அண்டை நாடான ஜோர்டானும் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் நடவடிக்கை குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.