ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசம் செல்கிறது என்பதுதான் தற்போது உலகின் முக்கிய செய்தி. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சாம்ராஜ்யங்களின் சவக்குழி என அழைக்கப்படுவதன் பின்னணி குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தை போல 5 மடங்கு பெரிய நிலப்பகுதி கொண்ட நாடு ஆப்கானிஸ்தான். இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த நாடு பொருளாதார ரீதியிலோ ராணுவ ரீதியிலோ முக்கியத்துவம் மிகுந்தது அல்ல. ஆனால் புவியியல் ரீதியான இருப்பிடம் இந்நாட்டை அரசியல் முக்கியத்துவம் மிகுந்ததாக மாற்றிவிட்டது. ஐரோப்பா, ரஷ்யா, சீனா, இந்தியா, எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகள் ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்துள்ளதால் இந்நாடு முக்கியத்துவம் மிகுந்ததாக திகழ்கிறது.
எனவே இதனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உலக வல்லரசுகள் முயன்றன. ஆனால் பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து புறமுதுகிட நேர்ந்ததுதான் இறுதியில் நடந்தது. இதனாலேயே ஆப்கானிஸ்தான் GRAVEYARD OF EMPIRES அதாவது சாம்ராஜ்யங்களின் சமாதி என அழைக்கப்படுகிறது. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆப்கானிஸ்தான் மீது 3 முறை போர் தொடுத்தும் தோல்வியே மிஞ்சியது. பல ஆயிரம் ராணுவ வீரர்களையும் பிரிட்டன் பலிகொடுக்க நேர்ந்தது. இதையடுத்து சோவியத் யூனியனும் ஆப்கானிஸ்தானை வசப்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. 14 ஆயிரம் பேரை பறிகொடுத்து படைகளை திரும்பப் பெற்றது சோவியத் யூனியன். அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளின் படைகள் கொண்ட நேட்டோவும் கூட ஆப்கானிஸ்தானில் தங்கள் 4 ஆயிரம் வீரர்களை பறிகொடுத்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பேரிழப்புகளை சந்தித்த அமெரிக்காவும் தற்போது படைகளை விலக்கிக்கொள்ள உள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் பழமைவாத ஆதிக்க சூழலும் வித்தியாசமான புவியியல் அமைப்பும் வல்லரசு படைகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போது 20 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மண் மீண்டும் பழமைவாத தலிபான்களின் ஆதிக்கத்தில் வந்துள்ளது. இந்த மாற்றம் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரம் என்பதோடு மட்டும் நின்று விடாமல் உலக பாதுகாப்பிலும் எதிரொலிக்குமா என்ற கவலையுடன் காத்திருக்கின்றன உலக நாடுகள்.