ஜோ பைடன் - ஆண்டனியோ குட்டெர்ரெஸ் முகநூல்
உலகம்

’ஈரானின் அணு உலை தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க மாட்டோம்’ - இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை

’ஈரானில் உள்ள அணு உலை தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க மாட்டோம்’- இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை.

PT WEB

இஸ்ரேலுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக அமெரிக்கா இருக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஈரானில் உள்ள அணு உலை தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 7 நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து விவாதித்தோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? புதிய பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஜி 7 தலைவர்களுடன் பேசப்பட்டது. இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அரணாக தொடர்ந்து அமெரிக்கா செயலாற்றும். அதேநேரத்தில், ஈரானில் உள்ள அணு உலை தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஆதரிக்க மாட்டோம்.“ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் தாக்குதலுக்கு ஐ. நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெர்ரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்த தாக்குதலால், பாலஸ்தீன மக்களின் துன்பம் மறையபோவதில்லை. பதிலுக்கு பதில் என்ற ஆபத்தான வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.“ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு மட்டும் குட்டெர்ரெஸ் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அந்நாடு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தங்கள் நாட்டினுள் நுழைய குட்டெர்ரெஸ்க்கு தடையும் விதித்தது. இதனை தொடர்ந்து ஈரான் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா. பொதுச்செயாளர் கருத்து தெரிவித்துள்ளார்.