உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அவசர நிலையாக பிரகடனம் !

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அவசர நிலையாக பிரகடனம் !

jagadeesh


கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சுகாதார அவசர நிலை என்றால் என்ன? இதற்கு முன்பு எப்போதெல்லாம் இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் உலகமெங்கும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த பாதிப்பை உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது. பொதுவாக ஒரு வைரஸோ அல்லது ஒரு நோயோ ஒரு நாட்டில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கு பரவும் போது அதன் தன்மையை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்யும். இது மனித சமூகத்துக்கே அச்சுறுத்தல் என்பதை அறியும் தருவாயில் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவிக்கும்.

இதன் மூலம் வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதென்பது உலகுக்கு உணர்த்தப்படும். வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளில் சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும். உலக சுகாதார அமைப்பின் அவசரகால கமிட்டி பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயண தடை விதிப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்கும். வைரஸ் பாதிப்பு தொடர்பான முழுமையான தரவுகள் ஓரிடத்தில் கிடைக்கும் அது மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வில் பெருமளவில் உதவும். முதன்முறையாக 2009ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.

2009ஆம் ஆண்டு ஹெச்1என்1 வைரஸ் உலகமெங்கும் பரவியது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் போலியோ ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2013ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் போலியோ பாதிப்பு தென்பட்டது. இதனையடுத்து 2014ஆம் ஆண்டு போலியோ பாதிப்பு சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஸிகா வைரஸ் வேகமாக பரவியது. இதுவும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டது. 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் எபோலா வைரஸ் பாதிப்பை சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்யப்பட்டது. சுமார் 11 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதன் மூலம் விரைவில் இதற்கு தடுப்பு மருந்து கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.