உலகம்

புதினுக்காக மீண்டும் வளைக்கப்படும் சட்டம்... அடுத்த அதிபர்களுக்கும் அடித்தது 'லக்'!

புதினுக்காக மீண்டும் வளைக்கப்படும் சட்டம்... அடுத்த அதிபர்களுக்கும் அடித்தது 'லக்'!

jagadeesh

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நலனுக்காக அந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவரப்பட இருப்பது மீண்டும் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் செய்திகள் வெளியாகின. புதின் சமீப காலமாக பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோயின் பிடியில் சிக்கி தவித்து வருவதாகவும், அதன்காரணமாக கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் கடுமையான வலியை உணர்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களை ரஷ்ய அரசு மறுத்து வருகிறது.

 இது ஒருபுறம் இருக்க, புதினுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதவி விலகிய பின்னரும், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படாது. புதினுக்கு மட்டுமில்லை, இவருக்கு பின் அதிபராக பதவி வகிக்கும் நபர்கள் யாரும் அந்தப் பதவியில் இருந்து விலகிய பின் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட மாட்டாது. அதாவது, முன்னாள் அதிபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது எந்தவித வழக்கும் தொடுக்க முடியாது. அவர்கள் போலீஸ் விசாரணை உட்பட எந்தவித விசாரணையின் எல்லைக்கு வெளியே இருப்பார்கள்.

மேலும், இந்தச் சட்டத் திருத்தத்தால் அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியாது. அதேநேரத்தில், தேசத் துரோக வழக்குகளில் சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே முன்னாள் அதிபர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கப்படுகிறது இந்தப் புதிய சட்டத் திருத்தம். இந்தச் சட்டத்திருத்தத்தால் தற்போது புதின் மட்டுமில்லாமல் இன்னொருவரும் பயன் அடைய இருக்கிறார். அவர் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ். ரஷ்யாவின் முன்னாள் அதிபர்களில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரே நபர் இந்த டிமிட்ரி மெத்வதேவ் மட்டுமே. இவர், புதினின் நெருங்கிய நண்பரும்கூட.

இந்நிலையில், புதிய சட்டத்திருத்த மசோதா, தற்போது ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டுமாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மாசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பாததால், கீழ் சபையான டுமாவில் மசோதா தாக்கல் வெற்றிபெற்றுள்ளது. இதன்பின் நாடாளுமன்ற மேல் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட பின்னர், புதின் இந்தத் திருத்தத்தில் கையெழுத்திடுவார். அதன்பிறகு சட்டமாகும்.

ரஷ்ய சட்டப்படி அதிபர் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. ஆனால், இந்தச் சட்டம் புதினுக்காக வளைக்கப்பட்டது. செல்வாக்கு மிக்க நபராக ரஷ்யாவின் முகமாக மாறிப்போன புதின், ஜி ஜின்பிங்கை போல ரஷ்யாவின் நிரந்தர அதிபராக தீர்மானித்தார். அதன்படி, 2036 வரை புதின் அதிபராக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில், ரஷ்ய மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடந்த வாக்கெடுப்பில் 77.93% மக்கள் புதின் 2036 வரை அதிபராக தொடர்வதற்கு பச்சைக்கொடி காட்டினர். இதனைத் தொடர்ந்து 2036 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடருவார் என்று அறிவிப்பும் வெளியானது குறிப்பிடத்தக்கது.