தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டு, உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, அதனை தொழிலதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. எனவே அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவை, கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் இந்தியாவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இருப்பினும் விஜய் மல்லையாவிற்கு கைதான சில மணிநேரங்களிலேயே ஜாமீன் வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.