கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வரும் தய்யீப் எர்டோகன், அந்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி - சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த நிலநடுக்கத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தவிர, கடந்த சில மாதங்களாகப் பொருளாதாரரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்துள்ளது. இதையடுத்துதான், அதிபர் எர்டோகனைப் பதவியில் இருந்து இறக்க முடிவு செய்த எதிர்க்கட்சிகள், அதற்காக மக்களின் துணையுடன் அனைத்தும் ஒன்றினைந்தன.
இதையடுத்து எர்டோகனை எதிர்த்து குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமால் கிளிக்டரோக்லு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே கடந்த மே 15ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.
துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மையாகக் கருதப்படும். அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், எர்டோகன் பெரும்பான்மையை இழந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எர்டோகன் 52% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இதையடுத்து அவர் அந்நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்றது குறித்து எர்டோகன், “தன்னை நம்பி மேலும் 5 ஆண்டுகள் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. மேலும், மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன். இது வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். துருக்கியின் நலனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் எர்டோகனுக்கு, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ”இரண்டாவதுகட்ட வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளா் கெமால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவா், “இந்தத் தோ்தலில் எனக்கு எதிராக அனைத்து அரசு இயந்திரங்களையும் எா்டோகன் முடக்கிவிட்டாா். அந்த வகையில், அண்மைக் காலத்தில் நடந்ததிலேயே மிகவும் நியாயமற்று நடைபெற்றுள்ள முறைகேடான தோ்தல் இதுவாகும். அதிபா் தோ்தல் தோல்வியை வெளிப்படையாக ஏற்பதை அவா் தவிா்த்துவிட்டாா்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.