ராணுவக் குடும்பத்தில் பிறந்த, முன்னாள் விமானப்படை அதிகாரியின் மகளான வர்ஷா ராஜ்கோவா, இளம் வயதிலேயே உலகை ஆராயத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் வர்ஷா ராஜ்கோவா சுற்றுச்சூழல் ஆர்வலர், சர்வதேச அழகி, மிஸ் ஸ்கூபா இன்டர்நேஷனல் 2016, TEDx பேச்சாளர், சர்வதேச மாடல் மற்றும் இந்தியாவின் காலநிலை யதார்த்த தலைவர் (Climate Reality Leaders) என பன்முகங்களை பெற்றவர். இவர் இந்த வருடம் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் COP 29-ல் கலந்து கொள்கிறார். அதில் காலநிலை மாற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து வாதிட இருக்கிறார் அவர்.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு 2024 / UNFCCC-ன் கட்சிகளின் மாநாடுதான், COP29 என்று அறியப்படுகிறது. இது 29-வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடாகும். COP29 நவம்பர் 11 முதல் 22, 2024 வரை அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறுகிறது.
COP கூட்டங்கள் அனைத்தும், பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களை மையமாகக் கொண்டுள்ளன. UNFCCC-ன் ஒட்டுமொத்த இலக்கான காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதே COP கூட்டங்களின் நோக்கமாகும்.
உலகளாவிய எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்கட்டமைப்பு
உலகளாவிய எரிசக்தி சேமிப்பு திறனை ஆறு மடங்கு அதிகரித்து, 2030-க்குள் 1,500 ஜிகாவாட்டை அடைவது.
2030-க்குள் 25 மில்லியன் கிலோமீட்டர் மின்கட்டமைப்புகளை சேர்ப்பதன் மூலம் மின்கட்டமைப்பு திறனை மேம்படுத்துவது
கடல் மற்றும் கடலோர நெகிழ்திறனை ஆதரித்தல்
காலநிலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்
சமூக தகவமைப்பு முயற்சிகளை முன்னேற்றுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான பயன்பாடுகளிலிருந்து பயனடையக்கூடிய கடல்சார் காலநிலை தீர்வுகளை ஊக்குவித்தல்
ஆகியவை
இவற்றை நிறைவேற்ற உரிய விஷயங்களை ஆலோசிக்கவும், உலகெங்கிலும் உள்ள தலைவர்களிடமிருந்து பிற விஷயங்கள் கற்றுக்கொள்ளவும், காலநிலை மாற்றம் - கடல்கள் - பல்வேறு சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து குரல் கொடுக்கவும், நேர்மறையான உலகளாவிய தாக்கத்தையும் மாற்றத்தையும் எடுத்துரைத்து அதற்கெல்லாம் தீர்வுகளை எவ்வாறு கொண்டுவரலாம் என ஆலோசிக்கவும் தன் நோக்கமாகக் கொண்டுள்ளார் வர்ஷா.
இன்று நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களும் எதிர்கால தலைமுறையினருக்கு நேர்மறையான தாக்கத்தையும், இந்த பூமியில் சிறப்பாக வாழ்வதற்கான சூழலையும் கொண்டுவரும்வர்ஷா ராஜ்கோவா
வர்ஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பில் ஸ்கூபா டைவிங் செய்து கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி படித்துள்ளார். மேலும் மிஸ் ஸ்கூபா இந்தியா 2019 பட்டம் வென்ற ஸ்டீஃபி ஷாஜி, மிஸ் ஸ்கூபா ஆஸ்திரேலியாவின் தேசிய இயக்குனர் ஜெரமி லாய், மலேசிய கடல் ஆராய்ச்சி அறக்கட்டளை அதிகாரிகள், WWF (உலக வனவிலங்கு நிதியம்) மற்றும் சபா சுற்றுலா மலேசியாவின் சில அதிகாரிகளுடன் இணைந்து மலேசியாவின் சபாவில் கடல் சுத்திகரிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் வர்ஷா.