அமெரிக்காவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடகரோலினா மாநிலத்திலிருந்து புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு ‘அலெஜியன்ட் ஏர்லைன்ஸ்’ எனப்படும் தனியார் நிறுவன விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த விமானம் சென்ற வழியில், டர்புலன்ஸ் (turbulence) எனப்படும் காற்றின் வலிமையான வேகத்தால், விமானம் திடீர் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். விமானத்தில் பயணித்தவர்களில் 4 பேர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒரு பணிப்பெண் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில், அவருடை கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுபோல், இன்னொரு பயணிக்கு கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளது. பல பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், கால் முறிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எனினும், அந்த விமான நிறுவனம், விமானம் எந்த தடையுமின்றி ஓடுதளத்தில் தரையிறங்கியது எனத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த விமான நிறுவனம், இந்த நிகழ்வு குறித்து தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரம் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், ‘நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.