உலகம்

பின்லேடனின் மகன் கருப்பு பட்டியலில் சேர்ப்பு‌

பின்லேடனின் மகன் கருப்பு பட்டியலில் சேர்ப்பு‌

webteam

அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இவர் திட்டப்படி அமெரிக்காவின் அடுக்குமாடி கட்டடத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் உலகையே அதிர வைத்தது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியது. இதனால் அல்கொய்தாவை அழிக்க வேண்டும், பின்லேடனை கொல்ல வேண்டும் என்பதே அமெரிக்காவின் லட்சியமாக ஆனது. சுமார் 10 ஆண்டுகள் தேடுதலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஓசாமா பின்லேடனை கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க சிறப்பு படை அதிரடியாக சுட்டுக்கொன்றது.

இதனைத்தொடர்ந்து ஒசாமாவின் 3 மனைவிகள் மற்றும் அவரது மகன்கள் சவுதி அரேபியா திரும்ப அமெரிக்க அனுமதி அளித்தது. இந்த சூழலில் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் அவரது மகன் ஹம்சா பின்லேடன் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகின. சுமார் 30 வயது மதிக்கத்தக்க இவர், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளை இணைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் இவரை அமெரிக்கா தேடி வருகிறது. மேலும் ஹம்சா பின்லேடன் அல்கொய்தாவில் முக்கிய தலைவராக மாறியதால் அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (7 கோடி ரூபாய்) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹம்சா பின்லேடனை கருப்பு பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் அவர் சர்வதேச அளவில் பயண மேற்கொள்ள தடை விதித்தும், சொத்துகளை முடக்கியும், ஆயுதங்களை விற்பனை செய்ய தடை விதித்தும் ஹம்சா பின்லேடக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹம்சாவின் குடியுரிமையை சவுதி அரேபியா அரசு திரும்ப பெற்றுள்ளது.  இவர் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அல்லது சிரியா எல்லையில் பதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் ஈரானிலும் இவர் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.