இந்திய வம்சாவளி நபரின் பை எடை தொடர்பான பிரச்னையால் அவரின் விமான டிக்கடை யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
நவாங் ஓஷா என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வாழ்ந்து வருகிறார். இவர் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து நியூ ஒர்லியன்ஸ் நகருக்கு செல்ல யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்துள்ளார்.
அப்போது அவர் எடுத்து வந்த பை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எடையுடன் இருந்ததால் ரூ.20 ஆயிரம் லக்கேஜ் போடப்பட்டது. ஆனால் சென்ற முறை பயணம் செய்த போது ரூ.9 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது.
அதை தன் கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரின் டிக்கெட்டை ரத்து செய்தது. எனவே அவர் வேறு விமானத்தில் டிக்கெட் எடுத்து சென்றார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஓஷா வெளியிட்டார். இது வைரலாக, பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுவதாக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.