உலகம்

”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி

”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி

webteam

ஒரு முறை கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையாவை திருடன் என நினைக்கும் மனப்பான்மை நியாயமற்றது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கினார். ஆனால் அதை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றார்.

விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை. இதையடுத்து மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது. இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டார். விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனிடையே லண்டன் போலீசார் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார் விஜய் மல்லையா.

இதைத்தொடர்ந்து தற்போது விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில், வங்கி மோசடி வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஒரு முறை கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையாவை திருடன் என நினைக்கும் மனப்பான்மை நியாயமற்றது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக மல்லையா தனது நிலுவை தொகையை தொடர்ந்து செலுத்தி வந்தார் எனவும், இருப்பினும் வங்கி மோசடி பணமோசடி காரணமாக விஜய் மல்லையாவுடன் எந்த வியாபாரமும் வைத்துக்கொள்ளவில்லை எனவும் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.