உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ரைன் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
நேட்டோ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனில் 8-வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இதனால், உலக நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் போரில் உக்ரைனைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தப் போரில் ரஷ்யப் படைக்கு சொந்தமான 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 டாங்கிகள், 90 சிறிய ரக பீரங்கிகள், 900 ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை அழித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய படைகளைச் சேர்ந்த 9,000 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இருப்பக்கமும் உயிர்கள் பலியாகியுள்ளநிலையில், போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்துவதற்காக, ரஷ்யா - உக்ரைன் இடையே இன்று பெலாரசில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரேனிய பொதுமக்கள், செர்னிஹிவ் பகுதியில் பாக்மாச் நகரத்தின் வழியாக உள்ளே நுழையும், ரஷ்ய ராணுவ டாங்கிகள் மீது ஏறி தடுக்கும் காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது. உக்ரேனிய மக்களின் இந்த துணிச்சல் ஈடு இணையற்றது என ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய விசே கிராடு 24 குழு பாராட்டியுள்ளது.