உலகம்

வீட்டை துளைத்த ரஷ்ய ஏவுகணை... அசால்ட்டாக 'ஷேவ்' செய்த உக்ரைன் இளைஞர்!

வீட்டை துளைத்த ரஷ்ய ஏவுகணை... அசால்ட்டாக 'ஷேவ்' செய்த உக்ரைன் இளைஞர்!

ஜா. ஜாக்சன் சிங்

தனது வீட்டை ரஷ்யாவின் ஏவுகணை துளைத்து நின்ற போதிலும், அது பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அதன் அருகே அசால்ட்டாக நின்று உக்ரைன் இளைஞர் 'ஷேவ்' செய்யும் வீடியோ சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 120 நாட்களையும் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் உக்ரைன் உருக்குலைந்து போயிருந்தாலும் அந்த நாட்டு மக்களுக்கே உரித்தான துணிச்சலும், நம்பிக்கையும் இன்னும் சிதைந்து போகவில்லை. ரஷ்யப் படையினருக்கு எதிராக கைகளில் ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி உக்ரைன் மக்கள் போரிட்டு வருகின்றனர். இந்தப் போரில் பல இளம்பெண்களும் பங்கேற்றுள்ளனர். தினமும் தவறாமல் கேட்கும் வெடிகுண்டு சத்தத்துக்கும், மரண ஓலத்துக்கும் உக்ரைனின் குழந்தைகள் கூட பழகிவிட்டதாகவே தெரிகிறது.

இதனை நிரூபிக்கும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உக்ரைனில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்நகரில் உள்ள ஒரு வீட்டை, நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று துளைத்துக் கொண்டு அந்த வீட்டின் சமையறையில் ஒரு எமனை போல செங்குத்தாக நின்றுக் கொண்டிருக்கிறது. வேறு ஒருவராக இருந்தால், முதல் வேலையாக அந்த வீட்டையே காலி செய்திருப்பார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளரான 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர், அதற்கு மறுதினம் காலையில் அந்த ஏவுகணைக்கு பக்கத்தில் நின்றபடியே அசால்ட்டாக தனது தாடியை 'ஷேவ்' செய்து கொண்டிருக்கிறார்.

https://www.reddit.com/r/Damnthatsinteresting/comments/vix5yk/a_piece_of_a_russian_ork_rocket_flew_into_the/?utm_source=share&utm_medium=web2x&context=3

இந்த வீடியோவை பார்த்த நெட்டீசன்கள், கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். ஒரு கமெண்ட்டில், "ப்ரோ, என் வீட்டுக்குள் இரு தினங்களுக்கு முன்பு கரப்பான் பூச்சி வந்ததால், பக்கத்து வீட்டுக்கு சென்று தூங்கியவன் நான். ஏவுகணை வந்தால் அல்ல. ஏவுகணை வருவதை போன்ற கனவு வந்தாலே நான் காலியாகி இருப்பேன் ப்ரோ" என ஒருவர் கூறியிருக்கிறார். இன்னொரு கமெண்ட்டில் ஒருவர், "ரஷ்யா தவறு செய்துவிட்டது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீதும், அதன் ஆயுதங்கள் மீதும் இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது" எனக் கூறியுள்ளார்.