உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பு - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பு - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி

ஜா. ஜாக்சன் சிங்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். இதனிடையே, கொரோனா முதல் அலையின்போது ( 2020-ம் ஆண்டு) நோய் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நூற்றுக்கணக்கானோரை அழைத்து போரிஸ் ஜான்சன் மது விருந்து நடத்தினார்.

அரசாங்க விதிமுறைகளுக்கு எதிராக பிரிட்டன் பிரதமரே நடந்து கொண்டது பெரும் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் வித்திட்டது. 'பார்ட்டி கேட்' (Party gate) என இந்தக் குற்றச்சாட்டுக்கு பெயரிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய லண்டன் காவல்துறையினர், போரிஸ் ஜான்சனுக்கு அபராதமும் விதித்தனர். ஆட்சியில் இருக்கும்போது சட்டத்தை மீறி அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற அவப்பெயரும் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்தது.

இந்நிலையில், ஆளும் பழமைவாத கட்சியினரே பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான்சனுக்கு ஆதரவாக 211 பேரும், எதிராக 148 பேரும் வாக்களித்தனர்.

59 விழுக்காடு பேர் ஆதரவாக வாக்களித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜான்சன் வெற்றி பெற்றார். இருந்தபோதிலும், அடுத்து வரும் தேர்தலில் பழமைவாத கட்சி சார்பில் ஜான்சன் போட்டியிடுவது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.