உலகம்

ஹைதராபாத் நிஜாமின் 300 கோடி யாருக்கு? - பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

ஹைதராபாத் நிஜாமின் 300 கோடி யாருக்கு? - பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

rajakannan

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போதும், பல்வேறு சமஸ்தானங்கள் தனித்தே இயங்கி வந்தன. பின்னர், சுதந்திர இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டன. இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட சமஸ்தானங்களிலே மிகவும் வளமானது, பெரியது ஹைதராபாத் தான். 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. 

அப்போது, ஹைதராபாத் சமஸ்தானை நிஜாம் உஸ்மான் அலிகான் (நிஜாம்-7) ஆண்டு வந்தார். இவர், தன்னுடைய கஜானாவில் இருந்து 8 கோடியே 82 லட்சத்து 7 ஆயிரத்து 470 ரூபாயை (1,007,940 பவுண்டுகள்) பாகிஸ்தானுக்கு வழங்கினார். புதிதாக அமைக்கப்பட்ட அன்றைய பாகிஸ்தானுக்கான பிரிட்டனின் உயர் அதிகாரி மூலம் இந்தப் பணம் சென்றது. ஆனால், இந்தப் பணத்திற்கு நிஜாமின் வாரிசுகள் உரிமை கோரியதால் சர்ச்சை எழுந்தது. 

இந்த வழக்கு லண்டன் உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்திய அரசுடன் இணைந்து நிஜாமின் வாரிசுகள் அந்தப் பணத்திற்கு உரிமை கோரினர். அதேபோல், பாகிஸ்தானும் அந்தப் பணத்திற்கு உரிமை கோரியது. வழக்கு தொடரப்பட்ட தருணத்தில் இந்தப் பணம் லண்டன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இன்றைய தினத்தில் அந்தச் சொத்தின் மதிப்பு 306 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 649 ரூபாய் (35 மில்லியன் பவுண்டுகள்). 

இந்நிலையில், 70 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், லண்டன் உயர்நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிஜாமின் வாரிசுகளான முக்காராம் ஜா (நிஜாம்-8) மற்றும் அவரது இளைய சகோதரர் முஃபாகாம் ஜா இருவரும் இந்திய அரசுடன் இணைந்து நடத்திய வழக்கில் அவர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. 

“நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். 1948ம் ஆண்டு முதல் நிலவி வரும் இந்தப் பிரச்னையில் சர்ச்சைக்குரிய நிதியை பயன்படுத்த எட்டாவது நிஜாமிற்கு உரிமை உள்ளது என்பது தீர்ப்பு உறுதி வந்துள்ளது. இந்தச் சிக்கல் எழுந்த போது என்னுடைய தரப்பு நிஜம் ஒரு குழந்தை. தற்போது அவருக்கு வயது 80. தன்னுடைய வாழ்நாளில் அவருக்கு தீர்ப்பில் நியாயம் கிடைத்ததில் மகிழ்ச்சி” என்கிறார் எட்டாவது நிஜாமின் வழக்கறிஞர் பவுல் ஹவிட்.