உலகம்

பைடன் வெற்றி மோசடியானது: ட்ரம்ப்

பைடன் வெற்றி மோசடியானது: ட்ரம்ப்

Sinekadhara

பைடன் தேர்தலில் வெற்றிபெற்றதாக ட்ரம்ப் முதன்முறையாக கூறியுள்ளார். ஆனால், அந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகியும், யார் வெற்றிபெற்றது என்பதில் குழப்பம் நிலவிவந்தது. காரணம், அமெரிக்காவை பொருத்தவரை, வெற்றிபெற்றவர் யார் என்பது அறிவிக்கப்படவேண்டும், அதை தோல்வியடைந்தவர் ஒத்துக்கொண்டு வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த சூழல் அமெரிக்காவில் நிலவாத காரணத்தினால், யார் வெற்றிபெற்றார் என்ற குழப்பமான சூழல் நிலவிவந்தது.

ட்ரம்ப் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாததைக் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், ட்ரம்ப் ஒருபோதும் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டார். ஆனால் தேர்தல் முடிவுகளை வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார் என்று கருத்துகளைக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்வீட்டில் பைடன் வெற்றிபெற்றிருக்கிறார், ஆனால் அந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது என பதிவிட்டுள்ளார். தவறுதலாக, மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளை வைத்துதான் பைடன் வெற்றிபெற்றதாகவும், மேலும் ஓட்டு எண்ணப்படும்போது எந்தவொரு வாக்காளர்களோ அல்லது பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் டொனால்டு ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துள்ளதாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.