ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற கோவிட் தடுப்பூசியை கண்டறியும் விஞ்ஞானி குழுவில் ஒருவரான ஆண்ட்ரே போடிகோவ் என்ற விஞ்ஞானி, அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்திருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போடிகோவ் என்ற 47 வயதான மூத்த ஆய்வாளர், சூழலியல் மற்றும் கணிதத்திற்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் தனது அபார்ட்மண்டில் சடலமாக நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மீட்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியானது. இவர் தனது சிறப்பான கொரோனா தடுப்பூசி கண்டறிவு பணிக்காக ரஷ்ய அதிபர் புதினிடம், கடந்த 2021 ஆம் ஆண்டு விருது பெற்றிருந்த வைராலஜிஸ்ட் ஆவார். அப்படியான ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது, ரஷ்யாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, 29 வயது இளைஞரொருவர்தான் விஞ்ஞானியை கழுத்தை நெறித்து கொன்றதாக தெரியவந்துள்ளது. வீட்டில் நடந்த ஏதோவொரு பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட மோதலின் இறுதியில் இந்தக் கொலை நடந்ததாக ரஷ்ய காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக் குழு தரப்பில், “கைதானவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் மீது ஏற்கெனவே குற்றப்பதிவுகள் உள்ளது. விரைவில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.