உலகம்

கப்பல் மோதி ஏற்பட்ட எண்ணெய் கசிவால் 40டால்பின்கள் உயிரிழப்பு?: மொரீஷியஸில் போராட்டம்

கப்பல் மோதி ஏற்பட்ட எண்ணெய் கசிவால் 40டால்பின்கள் உயிரிழப்பு?: மொரீஷியஸில் போராட்டம்

Veeramani

மொரீஷியஸ் கடலில் வகாஷியோ என்ற எண்ணெய் கப்பல், கடந்த மாதம் பவளப்பாறையில் மோதி ஏற்பட்ட கசிவின் விளைவாக 40 டால்பின்கள் உயிரிழந்தன என்று குற்றம்சாட்டி தலைநகர் போர்ட்லூயிஸில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணெய் கசிவு நடந்த இடத்திற்கு அருகே குறைந்தது 40 டால்பின்கள் இறந்தது குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உள்ளூர் சுற்றுச்சூழல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் “ இது மிகவும் முக்கிய பிரச்சினை. அதனால் பிரேத பரிசோதனைகளின் போது சமூக செயற்பாட்டாளார்கள் மற்றும் சூழலியல் ஆர்வர்கள் உடனிருக்க வேண்டும். மேலும் தன்னிச்சையாக இயங்கும் நிபுணர்களிடமிருந்து பிரேத பரிசோதனை குறித்து இரண்டாவது கருத்தை பெறவேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.

உயிரிழந்த அனைத்து டால்பின்களையும் பிரேத பரிசோதனை செய்வதாக அரசாங்கம் கூறியுள்ளதுடன், எண்ணெய் கசிவு குறித்து ஆராய ஒரு ஆணையத்தையும் அமைத்துள்ளது. இதுவரை இரண்டு டால்பின் உடல்களை மட்டுமே ஆய்வு செய்துள்ளன. அவை காயத்தின் அறிகுறிகளைக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் உடலில் எண்ணெய் தடயங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டு டால்பின்களின் பிரேத பரிசோதனை அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆல்பியன் மீன்வள ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்டது. வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கரையொதுங்கிய 25 டால்பின்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன என்று மீன்வளத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஜாஸ்வின் சோக் அப்பாடு தெரிவித்துள்ளார்.