உலகம்

வெள்ளை அணுக்களுக்கு பிடித்த சிரிப்பு : இன்று உலக சிரிப்பு தினம் !

வெள்ளை அணுக்களுக்கு பிடித்த சிரிப்பு : இன்று உலக சிரிப்பு தினம் !

webteam

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது மருத்துவர்களும் ஒப்புக்கொண்ட ஒன்று. சிரிப்பைப் போற்றும் வகையில் உலக சிரிப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இன்றைய இயந்திர உலகில் சிரிப்புதான் தேவை. ஏனென்றால் அது சிறந்த மருந்து என்கிறார்கள் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும். சிரிக்கும் போது, முழு உடலுக்கும் அது நன்மை தருகிறது. அதன் மூலம் உள்ளுறுப்புகளை வலிமையாக்க முடியும் என ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 300 முதல் 400 முறைகள் சாதாரணமாக சிரிப்பதாகவும், ஆனால் வயது கூடக் கூட இந்த எண்ணிக்கை குறைவதாகவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும், அவற்றின் மூலக் கூறுகளின் எண்ணிக்கையும் குறைவதாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு தான் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கட்டாரியா என்பவர் முதல்முறையாக 1998ஆம் ஆண்டு உலக சிரிப்பு தினம் கடைப்பிடிப்பதை ஆரம்பித்து வைத்தார். உலக நாடுகள் முழுக்க இயங்கி வரும் லாட்டர் யோகா இயக்கத்தை (Laughter Yoga Movement) தொடங்கியவரும் இவர் தான். ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், பணம் பண்ணும் நோக்கில், அவசரம் அவரசம் என சிரிப்பை மறந்து சீறி பாய்கிறோம்.

சிரிப்பதற்கு நேரமில்லாமல் பறப்பதால் தான் நோய்கள் நம்மை தேடி வருகின்றன. மன அழுத்தம் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. எனவே தான் வீடு, வேலை என அனைத்திலும் நாம் டென்ஷன் ஆகிறோம். அந்த டென்ஷனை குறைக்கும் சூப்பர் டானிக், சிரிப்பு மட்டுமே! அதனால் சிரிப்போம். மற்றவர்களையும் சிரிக்க வைப்போம். நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.

’ஏலேய், டோன்ட் வொர்ரி பி ஹேப்பி !’