டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று, ஜப்பான் அரசுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் ஜப்பானும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஜூலை 23ஆம் தேதி டோக்கியோ ஒலிம்பிக் தொடங்குகிறது. இந்நிலையில், அந்நாட்டு அரசுக்குக்கும் அதிகாரிகளுக்கும் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைப்பு மிக முக்கியமான கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளது. அதில், தற்போதைய நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்துவதான் சரியானதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் நடமாட்டம் தொற்று எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெற்று முடிந்தபிறகு உலக நாடுகளில் தொற்று பரவ ஜப்பான் முக்கிய காரணமாகவிடும் என்றும் இந்த நிலையை உருவாக்க வேண்டாம் எனவும், மருத்துவர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.