இந்தியாவுடன் மோதல்போக்கு உள்ள சூழலில், எல்லைப் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை சீன அரசு நிறைவேற்றியுள்ளது.
லடாக் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்தியா - சீனா இடையே எல்லைப்பிரச்னை நீடித்து வருகிறது. அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் அத்துமீறும் சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், எல்லையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை சீன அரசு கொண்டுவந்துள்ளது.
அதன்படி, எல்லையில் அத்துமீறும் நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரவுள்ள இந்த சட்டம், எல்லையில் தேவையான அளவு வீரர்களை குவிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. ராணுவ பயிற்சிகளை எல்லைப் பகுதியில் மேற்கொள்ளவும், போர் போன்ற சூழல்கள் உருவானால் உடனடியாக எல்லையை மூடவும் புதிய சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.