உலகம்

திமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

திமிங்கலத்தின் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

webteam

தாய்லாந்தில் உயிரிழந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், கடல்வாழ் உயிரின ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரமாண்ட திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அதை காப்பாற்றுவதற்காக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த திமிங்கலம் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து திமிங்கலம் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டதில் அதன் வயிற்றில் சுமார் 8 கிலோ எடையில் 80-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.