அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில் டார்சான் திரைப்படத்தில் நடித்த ஜோ லாராவும் அவரது மனைவியும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவர். 1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான "டார்சன் இன் மன்ஹாட்டனில்" டார்சானாக லாரா நடித்திருந்தார். பின்னர் அவர் 1996-1997 வரை வெற்றிகரமாக ஓடிய "டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.
பின்னர் லாராவும் அவரது மனைவியும் 1999 ஆம் ஆண்டு டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவினர். கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்தை நிர்வகித்து வந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோக்ததில் ஆழ்த்தியிருக்கிறது.