உலகம்

கொரோனா பரவலை விமர்சித்து வந்த தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி திடீர் மரணம்!

கொரோனா பரவலை விமர்சித்து வந்த தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி திடீர் மரணம்!

EllusamyKarthik

தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, நோயின் தீவிரத்தால் பலியாகி உள்ளார். அவருக்கு வயது 61. ‘தி புல்டோசர்’ என பரவலாக அறியப்படுபவர். அதற்கு காரணம் அவரது கொள்கைகளும், கோட்பாடுகளும் தான். அதுவே அவரை மக்களின் மனங்களை கவர்ந்த மகத்தான தலைவராக உருவாக்கியுள்ளது. 

இருப்பினும் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தனது கொடூர வேலைகளை காட்டி வந்த சூழலில் முகக்கவசம் அணிவது, ஊரடங்கு நடைமுறை உட்பட அனைத்தையும் விமர்சித்தார். ஒரு கட்டத்தில் தங்கள் நாட்டின் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவரின் தரவுகளை வெளியிடவே மறுத்தார். குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்தின் மூலமாக தங்கள் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும் எனவும் மக்களை எச்சரித்திருந்தார் அவர். 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் மகுபலி தனது இருப்பிடத்தை ரகசியமாக வைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்தே அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டிருக்கலாம் என எதிர்க்கட்சியினர் சந்தேகித்தனர். இந்த நிலையில் தான் தான்சானியா அரசு மகுபலி உயிரிழந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாட்பட்ட இதய நோய் அவரது மரணத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

அவரது மரணத்தை தொடர்ந்து Samia Suluhu அதிபராக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.