உலகம்

விரைவுச் செய்திகள்: கேஸ் விலை அதிகரிப்பு | ஆப்கான் - இந்தியர்களுக்கு உதவி மையம்

விரைவுச் செய்திகள்: கேஸ் விலை அதிகரிப்பு | ஆப்கான் - இந்தியர்களுக்கு உதவி மையம்

Sinekadhara

கேஸ் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு: வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மேலும் 25 ரூபாய் விலை அதிகரித்திருக்கிறது. கடந்த இரு மாதங்களில் 50 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அர்ச்சகர் பணி நியமனம் - குற்றச்சாட்டுக்கு மறுப்பு: கோயிலில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்களை வெளியேற்றும் எண்ணமில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்திருக்கிறார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் பிற சமூகத்தினருக்கு பாதிப்பு என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கும் மறுப்பு.

மேலும் 120 பேருடன் இந்தியா புறப்பட்ட விமானம்: காபூலில் இருந்து மேலும் 120 பேரை அழைத்துக்கொண்டு ராணுவ விமானம் இந்தியா புறப்பட்டது. ஆப்கானில் இருந்து வெளியேறுவோர் வசதிக்காக மின்னணு முறையில் விசா பெறும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியது.

தூதரை வாபஸ் பெற்றது இந்தியா: ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரை திரும்பப் பெற்றது வெளியுறவு அமைச்சகம். ஆட்சிப்பொறுப்பை தலிபான்கள் கைப்பற்றியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் தளமாகிவிடக் கூடாது: ஆப்கானிஸ்தானில் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என ஐநா சபை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நாடு பயங்கரவாதிகளின் தளமாக மாறிவிடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்: ஆப்கானிஸ்தானில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. அண்டை நாடு என்கிற வகையில் அங்குள்ள நிலை கவலையளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

படைகளை திரும்பப் பெறும் முடிவில் மாற்றமில்லை: ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப்பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை புனரமைப்பதற்காக படைகளை அனுப்பவில்லை என்றும் பேட்டியளித்திருக்கிறார்.

வீடுவீடாக சோதனை நடத்தும் தலிபான்கள்: அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து தலிபான்கள் சோதனை நடத்திவருகின்றனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தான் கொடியையும் அப்புறப்படுத்தினர்.

ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிய அதிபர்: ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஓமன் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார். ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் வெளியேறியதாக ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விமான நிலையத்தில் மக்களை வெளியேற்ற நடவடிக்கை: காபூல் நகருக்குள் சுமார் மூன்றாயிரம் வீரர்களை அமெரிக்க ராணுவம் குவித்திருக்கிறது. மக்களை வெளியேற்றி விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆப்கான் - இந்தியர்களுக்கு உதவி மையம்: காபூலில் உள்ள நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களுக்காக உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பீதியால் முடங்கிய விமான நிலையம்: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். விமானச்சக்கரத்தை பிடித்து தப்ப முயன்றவர்களில் 3 பேர் குடியிருப்புகள் மீது விழுந்து பலியாகினர்.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்யா: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்களுடன் இன்று ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறது. தலிபான்களின் செயல்பாட்டை பொறுத்து புதிய அரசை அங்கீகரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.

தலிபான்கள் அரசை அங்கீகரிக்கும் சீனா, பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புடன் செயல்படத் தயாரென சீனா அறிவித்திருக்கிறது. தலிபான்களின் ஆட்சியை ஆப்கானிஸ்தான் அரசு என பாகிஸ்தான் அங்கீகரித்த நிலையில் சீனா இந்த முடிவை எடுத்திருக்கிறது.

அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ.12 லட்சம் பறிமுதல்: சென்னையில் அதிமுக நிர்வாகி வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஒப்பந்தப்பணிகள் தொடர்பாக வெற்றிவேலின் தந்தை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

தொடரும் மோதல் - மீனவ கிராமங்களில் பதற்றம்: சுருக்குமடி வலையை பயன்படுத்தும் விவகாரத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே மோதல் நிலவிவருவதால் மீனவர் கிராமங்களில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

பெட்ரோல், டீசல் மீது வரி குறைக்கப்படாது: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது. புதுக்கோட்டை, நாகை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்திருக்கிறது.

நிலநடுக்க உயிரிழப்புகள் 1,400ஐ தாண்டியது: ஹைத்தி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1419 ஆக அதிகரித்துள்ளது. புயலும் தாக்கவிருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.

பும்ரா, ஷமி மேஜிக்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா வெற்றி: இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. பும்ரா, சமியின் அதிரடியால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.