உலகம்

தமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை

தமிழ் அமைப்புகளால் லண்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை

webteam

உலகப்புகழ்பெற்ற லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. 

லண்டன் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. ஏற்கனவே லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறை இயங்கி வந்தது. ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்ததால் 1995ல் தமிழ்த் துறை மூடப்பட்டது. இந்த நிலையில் அங்கு மீண்டும் தமிழ்த் துறையை கொண்டு வருவதற்காக தமிழ் சேர் யூகே (TAMIL CHAIR UK) என்ற பெயரில், தமிழ் அமைப்புகள் முயற்சித்தன. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுத்து வந்த முயற்சியின் பலனாக பல்கலைக்கழகம் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. 

தமிழ்மொழி குறித்த ஆய்வுக்கான துறையை ஏற்படுத்துவதில் பெருமை கொள்வதாக லண்டன் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இருக்கை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அதற்காக 54 கோடி ரூபாய் நிதி திரட்டும் பணியில் தமிழ் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. 2021ஆம் ஆண்டுக்குள் தமிழ் இருக்கையை நிறுவ வேண்டும் என இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.