பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த ஒருவரை நூறுக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று கூட்டாக சேர்ந்து கொடூரமாக தாக்கி, அவரது உடலை தீயிட்டு எரித்து கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் அந்த நாட்டின் சியால்கோட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த அவரது பெயர் பிரியந்தா குமாரா என தெரியவந்துள்ளது.
“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” என்ற அரசியல் அமைப்பின் போஸ்டரை அவர் கிழித்து, குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது. அந்த போஸ்டர் அவரது அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்ததாம். அதை அவர் கிழித்த போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இருவர் அதனை பார்த்துள்ளனர். பின்னர் அந்த தகவல் செவி வழி செய்தியாக பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் பணியாற்றி வந்த இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய கும்பலால் கொடூரமாக அவர் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பந்தப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் உஸ்மான் Buzdar விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தானுக்கு இது அவமானகரமான நாள்” என ட்விட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : வெஸ்ட் இண்டீஸ் அணியில் அசத்தும் தமிழ் வம்சாவளி வீரர்! யார் இந்த 'வீராசாமி பெருமாள்’?