உலகம்

ராஜினாமா அச்சத்தால் தப்பிய கோட்டாபய ராஜபக்ச... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்!

ராஜினாமா அச்சத்தால் தப்பிய கோட்டாபய ராஜபக்ச... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்!

நிவேதா ஜெகராஜா

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை கொழும்புவில் பிரமாண்ட போராட்டம் தொடங்கிய நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தன் மாளிகையை விட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியாமல் இருந்த வந்தது. இந்நிலையில் கோட்டாபய, அவரது மனைவி, பாதுகாவலர் உட்பட 4 பேர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக ராணுவ விமானத்தில் ஏறி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நால்வரும் மாலத்தீவுக்கு சென்றதாக குடியேற்றத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோட்டாபய சென்ற விமானம் மாலத்தீவு தலைநகர் மாலேவில் இறங்க அனுமதி கிடைப்பதில் கடைசி நிமிடத்தில் சிக்கல் ஏற்பட்டதாகவும் எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு பின் அனுமதி கிடைத்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். கோட்டாபய கடந்த திங்கள்கிழமையே துபாய் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல் ஏற்பட்டதால் அத்திட்டம் நிறைவேறவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கோட்டாபய இன்று ராஜினாமா செய்வதாக அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்த பிறகு தனக்கு அதிபருக்குரிய பாதுகாப்பு கிடைக்காது என்பதால் வெளிநாட்டுக்கு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.