உலகம்

இலங்கை: 15 மணி நேரம் மின்தடை ஏற்படலாம் என எச்சரிக்கை

இலங்கை: 15 மணி நேரம் மின்தடை ஏற்படலாம் என எச்சரிக்கை

சங்கீதா

இலங்கையில் தினசரி மின் தடை 15 மணி நேரம் வரை நீட்டிக்கக்கூடும் என்று இலங்கை மின்வாரியம் எச்சரித்துள்ளது.

கொரோனா காரணமாக உலகமே பொருளாதார பிரச்னைகளை சந்திந்து வருகிறது. இந்நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த இலங்கையில், தற்போது கடும் நிதி நெருக்கடியும், பண வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் நிதி பற்றாக்குறையில் தவித்து வரும் நிலையில், நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் பற்றாக்குறையால் மின் உற்பத்தியும் இலங்கையில் தடைபட்டிருக்கிறது. தற்போது வரை தினசரி 10 மணி நேரங்கள் அங்கு மின்தடை ஏற்பட்டது.

இதற்கிடையில் சிலோன் மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, 13 மணி நேரங்களாக மின்தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த மின்தடை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எரிபொருள் நெருக்கடியாலும், வறட்சியான காலம் என்பதாலும், தினசரி மின்தடை 15 மணி நேரமாக அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வரையில், சுமார் ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் நீர் மின் உற்பத்தி மூலம் நடக்கும்நிலையில், போதிய நீர் இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், ஆயிரத்தி 700 மெகாவாட் அளவில் கொள்ளளவு இருக்கிறபோதிலும், எரிபொருள் இன்மையால், ஆயிரம் மெகாவொட் மின்சாரத்தை மட்டுமே வழங்கும் சூழல் உள்ளது.

இதனால் வரும் நாட்களில், மின்வெட்டு 15 மணிநேரமாக அதிகரிக்கக்கூடும் என்று மின்சார பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த மின்தடையால் தேயிலை உற்பத்தி போன்ற தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே அரசாங்கத்திற்கு மேலும் பொருளாதார பிரச்னை உண்டாகும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.