தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய நாட்டின் தூதரகத்தில் அமைந்துள்ள பெண்கள் குளியலறையில் பல உளவு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனையின் போது இது தெரியவந்துள்ளதாக ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய உள்ளூரை சேர்ந்த முன்னாள் தூதரக ஊழியர் ஒருவரை ராயல் தாய் போலீசார் கடந்த மாதம் கைது செய்ததாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் ஊழியர்களின் நலன் மற்றும் பிரைவசிக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாத்ரூமில் கேமரா இருப்பது தொடர்பாக கடந்த ஜனவரியில் தூதரக அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பாத்ரூமின் தரையில் எஸ்.டி கார்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெண்கள் குளியலறையில் பல இடங்களில் உளவு கேமரா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த வேலை எப்போதிலிருந்து நடந்து வருகிறது என்பது குறித்த விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
தூதரகத்தில் பலத்த பாதுகாப்பையும் மீறி கேமரா பொருத்தப்பட்டது பாதுகாப்பு குறைபாட்டை வெளிக்காட்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.