கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள அணு உலையான ஃபுகுஷிமாவின் டாய்சியும் சேதமடைந்தது. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது. இதனிடையே ஃபுகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்திலிருந்து ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவு நீரை சுத்திகரித்து பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட வேண்டி உள்ளது. இந்த செயல்முறையை முடிக்க 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீரைச் சுத்திகரிப்பு செய்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
இதற்கிடையே, இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஐ.நாவின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்குச் சென்றார். அவர் சுனாமியால் சிதைந்த ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டு, 'சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்கான திட்டங்களில் திருப்தி அடைந்தேன்' என்றார்.
இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை ஜப்பான் பெற்றுள்ளது. இத்திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை அளித்த மதிப்பீட்டின் நம்பகத்தன்மை குறித்து சீனா கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஃபுகுஷிமா ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு தென்கொரிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி ஏராளமான மக்கள் நேற்று தென்கொரியாவின் தலைநகர் சியோலில் ஒன்றுகூடி ’ஃபுகுஷிமாவின் அணுக் கழிவுநீரை கடலில் விடுவதை நாங்கள் கண்டிக்கிறோம்’ எனப் பதாகைகளை கையில் ஏந்தி பேரணி நடத்தினர். இந்தப் பேரணி மிக அமைதியாக நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் இந்த திட்டம் குறித்து தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் பார்க் ஜின் மற்றும் IAEA டைரக்டர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸ்ஸி ஆகியோர் விவாதம் நடத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகுதான் தென்கொரிய மக்கள் இப்பேரணியை நடத்தினர். IAEA, ஜப்பானுக்கு ஆதரவு அளித்ததால்தன் இந்த வெறுப்புக்கு தென்கொரிய மக்கள் ஆளாகினர். ’ஃபுகுஷிமா கழிவு நீர் நிச்சயமாக அனைத்து மனித இனத்தையும் பேரழிவிற்கு இட்டுச் செல்லும்’ என்று எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ’IAEAஐ அகற்று’ என்ற பதாகைகளை ஏந்திப் பேரணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் ஹான் சாங்-ஜின், "கடலில் நீரை வெளியேற்றுவதைத் தவிர, வேறு வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தண்ணீரை வெளியேற்ற ஜப்பானை அனுமதிப்பது சர்வதேச குற்றம் போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ”இந்த அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரை கடலில் திறந்துவிடுவதைத் தவிர, வேறு பாதுகாப்பான வழிகள் எதுவும் இல்லை” என ஜப்பான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.