அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளத்தால் அவற்றை பிடிக்க அமெரிக்கா இந்தியர்களை நாடி உள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பர்மீஸ் பைதான்கள் எனப்படும் மலைப்பாம்புகள் அதிகரித்து வருகின்றன. பர்மீஸ் பைதான்கள் அங்கு வாழும் வன உயிரினங்களை கொன்று தின்றுவிடுகின்றன. இதனால் பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபி ஆகியோரை பாம்பு பிடிக்க அமெரிக்க அரசு ப்ளோரிடா மாகாணத்திற்கு வரவழைத்துள்ளது. அவர்களுடன் இரு மொழி பெயர்ப்பாளர்களும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில், 13 பர்மீஸ் பாம்புகளை பிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று 16 அடி நீள பெண் மலைப்பாம்பு ஆகும். மேலும் முதலை ஏரி தேசிய வன விலங்கு சரணாலயத்தில் 4 மலைப்பாம்புகள் பிடிப்பட்டன. பாம்பு பிடிப்பதற்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த 2 இருளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மொத்தமாக 68,888 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.