உலகம்

இலங்கை பிரதமர் ஆகிறார் மகிந்த ராஜபக்ச?

இலங்கை பிரதமர் ஆகிறார் மகிந்த ராஜபக்ச?

webteam

இலங்கையில் மகிந்தா ராஜபக்ச தலைமையில் காபாந்து அரசு அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை உள்ளது. இதனால் புதிய அரசை நடத்திச் செல்வதில் பொதுஜன முன்னணிக்கு சில சவால்கள் உள்ளன. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தச் சூழலில் இலங்கைக்கு காபாந்து அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இலங்கையில் காபந்து பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்ச பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 15 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் காபாந்து ஆட்சி வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 தேதி வரை பதவியில் இருக்கும் எனத் தகவல் தெரியவந்துள்ளது. இதன்பின்னர் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.