உலகம்

இங்கிலாந்து எல்லையில் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு உணவு வழங்கிய சீக்கியர்கள்!

இங்கிலாந்து எல்லையில் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு உணவு வழங்கிய சீக்கியர்கள்!

JustinDurai

இங்கிலாந்து எல்லையில் தவித்துவரும் லாரி டிரைவர்களுக்கு 2,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளனர் சீக்கிய தொண்டர்கள்.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள இந்த புதிய வகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான தரைவழி எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.  

எல்லையில் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கே லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்த நபர்கள் மட்டுமே பிரான்ஸ் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறது. இதனால், உணவு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லாரி டிரைவர்கள் தவித்துவந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் தங்கள் தொண்டு அமைப்புகள் மூலம் இருநாட்டு எல்லையில் சிக்கி உணவின்றி தவித்து வரும் லாரி டிரைவர்களுக்கு உணவு தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். எல்லையில் சிக்கியுள்ளவர்களுக்கு தாங்களாகவே சமைத்து கொண்டு வருகின்றனர். மேலும், சில உணவகங்கள் சீக்கியர்களின் உதவியுடன் பீட்சா உள்ளிட்ட உணவுகளை டிரைவர்களுக்க்கு வழங்கி வருகின்றன. இதுவரை 2,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளதாக சீக்கிய தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.