பில் கட்டாததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக பெற்ற தாய்க்கு மருத்துவமனை தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள கிளினிக் ஒன்றில் நடந்துள்ளது. சோனியா ஓகோம் என்ற பெண்மணிக்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த கிளினிக்கில் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஏஞ்சல் என்று பெயரிடப்பட்டது. குழந்தை சுமார் 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டு இருந்தது. இதனால், மொத்தமாக 2 லட்சத்து 41 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சோனியா ஓகோமிடம் கூறப்பட்டது. சோனியாவால் பணம் கட்ட முடியாததால், குழந்தையை தாயிடம் இருந்து மருத்துவமனை பிரித்து வைத்தது.
தாயிடம் இருந்து குழந்தை பிரித்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நாட்டு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் ஒளிபரப்பானது. இதனையடுத்து, குழந்தையை விடுவிக்க சமூக வலைதளங்கள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. பல்வேறு பிரபலங்களும் அந்தக் குழந்தைக்காக பணம் கொடுத்தார்கள்.
இறுதியாக 5 மாதங்களுக்கு பிறகு குழந்தையானது தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தை கடத்தல் வழக்கில் அந்தத் தனியார் கிளினிக்கின் இயக்குநர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டு உடனடியாகக் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 5 மாதங்களுக்கு பிறகு தாயுடன் குழந்தை இணைந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது.