நேபாளத்தின் புதிய பிரதமராக பதவிவேற்ற ஷேர் பகதூர் தியூபா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகார போட்டி காரணமாக உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனால் பிரதமராக இருந்த கே.பி. ஷர்மா ஒலி கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதுதொடர்பான வழக்கில் நேபாள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா கடந்த 13ஆம் தேதி இரவில் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 249 உறுப்பினர்கள் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தியூபா வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தார். இதனையொட்டி நேபாள பிரதமர் தியூபாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவு மேம்பட இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.