தேவாலயம் ஒன்றை வாங்குவதற்கு உதவி செய்துள்ள துபாய் பிரதமர் ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இங்கிலாந்தின், கொடால்பின் க்ராஸிலுள்ள கிராமத்து மக்கள், மேத்தோடிஸ்ட் தேவாலயத்தை வாங்க முடிவு செய்தனர்.
தேவாலயத்தை வாங்குவதற்கு இந்த கிராமத்து மக்களுக்கு 90 ஆயிரம் பவுண்ட் தேவைப்பட்டிருக்கிறது. 25 ஆயிரம் பவுண்ட் ஏற்கெனவே திரட்டியிருந்தனர். தேவையான நிதியில் பெரும்பகுதியை துபாய் பிரதமர் ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் வழங்கியுள்ளார். அவர் எவ்வளவு தொகை அளித்தார் என்று தெரிவிக்கப்படவில்லை.
இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக, நிதி திரட்டும் கடைசி முயற்சியாக, கோடால்பின் மக்கள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் உதவி செய்துள்ளார். ’துபாய் ஷேக்கின் செயலை மிகவும் பாராட்டுகிறோம், நன்றி தெரிவிக்கிறோம்’ என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மெக்கீ தெரிவித்துள்ளார். ’இந்த தேவாலயம் எங்களுக்கு கிடைக்கும்பொழுது, ஷேக் முகமது அவர்கள் உடனிருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவரை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம்’ எனவும் மெக்கீ தெரிவித்துள்ளார்.
மத ரீதியான, இன ரீதியிலான வேறுபாடுகளால், உலகம் பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் சூழலில் இத்தகைய மத நல்லிணக்கம் போற்றும் சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.